Sunday, July 24, 2011

சிரச்சேதம் -மோஷின் ஹமீது




ஜன்னல் உடைப்படுவதை என்னால் கேட்கமுடிந்தது.  அந்த சப்தத்தை அமுங்கச்செய்ய ஏர்கண்டிஷனர் எதுவும் இல்லை.  நான் படுக்கையிலிருந்து எழுந்தேன்.  நான் எனது வயதுடையவனாக இருக்கவிரும்பவில்லை.  எனது பெற்றோர்களைப் போல வயதாகிப்போயிருக்க வேண்டும் அல்லது எனது மகனைப் போல சிறுவனகா இருந்திருக்க வேண்டும்.  எனது மனைவியிடம் சொல்வது நானாக இருக்க வேண்டாம் என்று விரும்பினேன் "அங்கேயே இரு; எல்லாம் நன்றாக இருக்கின்றன" நான் சொன்னதை அவள் மட்டுமல்ல நானும் நம்பவில்லை.  கீழே யாரோ சப்தமிட்டார்கள் அதை நாங்கள் இருவருமே கேட்டோம்.  "உடை அணிந்து கொள்" நான் அவளிடம் சொன்னேன். "நீ உடை அணிந்திருப்பது சற்றே நல்லது"
மின்சாரம் போய்விட்டது.   எனவே என்னுடைய மொபைல் போனைக்கொண்டு வழி எங்கே இருக்கிறதென்று கண்டுபிடித்தேன்.  மரப்படிகளில் சிலர் ஏறிவரும் சப்தம் கேட்டது.  படுக்கை அறையின் கதவை சாத்திப் பின்பக்கமாய் பூட்டினேன்.  டார்ச் லைட்டுகளின் வெளிச்சத்தில் நிழல்கள் குதித்தன,  நீண்டன.  நான் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தினேன்.  "நான் இங்கே இருக்கிறேன்" அவர்களிடம் சொன்னேன்.  அதை அடித்துச் சொல்ல விரும்பினேன்.  ஆனால் ஒரு குழந்தை கிசு கிசுப்பைப்போல என் குரல் ஒலித்தது.  ப்ளீஸ், எல்லாம் சரியாக இருக்கிறது-!
நான் தரையில் கிடந்தேன்.  யாரோ என்னைத் தாக்கிவிட்டார்கள்.  கையால் அடித்தார்களோ, இரும்புக் கம்பியால் அடித்தார்களோ தெரியவில்லை.  என் பாய் முழுவதும் ரத்தம் கொழ கொழத்தது.  அதிலிருந்து ஒரு வார்த்தையும் வெளியில் வரவில்லை.  தாடையைத் திறந்து வைத்துக் கொண்டேன்.  வாயால் மூச்சு விடுவதற்கு வசதியாக எனது கைகள் முதுகுப்பக்கமாக இழுத்துப் பிணைக்கப்பட்டிருந்தன.  மின்சார வயரைப் போலத் தெரிந்தது.  நீங்கள் சிறுவர்களாக இருந்தபொழுது  தெருவில் கிரிக்கெட் விளையாடும்போது பந்தைச் சுற்றிக் கட்டுவதற்குப் பயன்படுத்துவீர்களே அந்த மாதிரி வயர்.  என் முகம் தரையில் பதிந்திருந்தது.  வலி தாங்க முடியாததாக இருந்தது.  மயக்கமடைவதற்கு முன் சப்தம் போட்டேன்.
இரண்டு ஆட்களுக்கிடையில் நான் இருந்தேன்.  அவர்கள் என் தோள் பட்டையையும், கைகளையும் பிடித்து அழுத்தி முன் வாசல் வழியாக என்னை இழுத்துப்போனார்கள்.  எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லை.  இன்னும் இரவாகவே இருந்தது.  மின்சாரம் வந்துவிட்டிருந்தது, எனவே வாயிலில் இருந்த விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.  அங்கே இருந்த வாயில்காப்பாளர் இறந்து கிடந்தார்.  அவர் ஒரு முதியவர். அப்படியே அவரது உடல் மடிந்து கிடந்தது.  அவரது முகம் மெலிதாக இருந்தது.  அவரை நாங்கள் பட்டினியாகவே வைத்திருந்ததுபோல அவரது தோற்றம் தெரிந்தது.  அவரை எப்படி கொன்றார்கள் என்று நான் நினைத்துக்கொண்டேன்.  நான் அவரை பார்த்தேன்.  ரத்தம் சிதறியிருக்கிறதா என்று தேடினேன்.  எனக்கு அவ்வளவாக அவகாசம் இல்லை.
அவர்கள் நான்குபேர் இருந்தார்கள்.  அவர்களிடம் தாமிர நிறத்தில் 81ஆம் ஆண்டு மாடலை சேர்ந்த கரோலா கார் இருந்தது.  நான் சிறுவயதாக இருந்தபோது எங்களிடமும் இப்படி ஒரு கார் இருந்தது.  இந்த கார் மிக மோசமாக நசுங்கி இருந்தது.  அவர்கள் டிக்கியை திறந்து  என்னை அதற்குள் அடைத்தார்கள்.  நான் எதையும் பார்க்க முடியவில்லை.  எனது முகம் அங்கே கிடந்த தரை விரிப்பில் பாதியும் "ஸ்பேர் டயரில்" பாதியுமாக அழுந்தி இருந்தது.  அந்த டயரில் ரப்பர் என் முகத்தில் ஒட்டிக் கொண்டதா? அல்லது என் முகம் அதில் போய் ஒட்டிக் கொண்டதா தெரியவில்லை.  வண்டி குலுங்கி குலுங்கி சென்றது.  ஒவ்வொரு முறை குலுங்கும்போதும் தூக்கிப்போட்டது.  ஒரு பல் டாக்டரிடம் இருப்பதைப்போல் நான் கற்பனை செய்து கொண்டேன்.  ஏற்கனவே உங்களுக்கு மோசமாக வலித்துக்கொண்டிருக்கும்.  மேலும் அவர் உங்களை வலிக்கச்செய்யப்போகிறார் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  ஆனாலும் அங்கே நீங்கள் காத்திருப்பீர்கள் வலி அவ்வளவாக தெரியாமல் இருக்க எப்படியெல்லாம் மனதை தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் உங்களுக்கு தெரிந்த தந்திரங்களையெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பீர்கள்.
எனக்கு காச்சல் வந்ததுபோல் இருந்தது.  தூக்கத்தில் பிதற்றச்செய்யும் மிக மோசமான மலேரியா காய்ச்சல்.  அவர்கள் எனது மகனையும், மனைவியையும் பெற்றோரையும் கொன்றிருக்கமாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.  அவர்கள் என் மனைவியை கற்பழித்திருக்கமாட்டார்கள் என்று நம்பினேன்.  அவர்கள் என்னை என்ன செய்தாலும் என் மீது அமிலத்தை ஊற்றமாட்டார்கள் என்று நம்பினேன்.  நான் சாக விரும்பவில்லை.  ஆனால் சாவதைப்பற்றி கவலைப்படவும் இல்லை.  நான் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்படவிரும்பவில்லை.  என் விதைக் கொட்டைகளை ஒருவன் கிடுக்கியில் வைத்து நசுக்குவதை நான் விரும்பவில்லை.  என் கண்களில் எவரும் சிகரெட் நெருப்பால் சுடுவதை நான் விரும்பவில்லை.  இந்த கார் பயணம் முடிந்துபோவதை நான் விரும்பவில்லை.  எனக்கு அது இப்போது பழகிவிட்டது.
அவர்கள் சூரிய வெளிச்சத்தில் என்னை வெளியே திறந்துவிட்டார்கள்.  அவர்கள் பெரிய உருவம் கொண்டவர்களாக இருந்தார்கள்.  என்னைவிடவும் பெரிய உருவம்.  சுவர்களில் பெயிண்ட் உரிந்துகொண்டிருக்கும் வீடொன்றுக்குள் என்னை அழைத்துச் சென்றார்கள்.  அங்கே ஜன்னல்களே இல்லாத பாத்ரூமுக்குள் வைத்து அடைத்தார்கள்.  நான் ஏற்கனவே சிறுநீர் கழித்துவிட்டேன்.  காலில் சிறுநீர் காய்ந்துபோன இடத்தில் அறித்தது.  நான் சந்தம்போடவில்லை.  அமைதியாக உட்கார்ந்து அவர்களோடு ஒத்துழைப்பதற்கு தயாரானேன்.  சரியாக தொழுவது எப்படி என்று மறந்துபோகாமல் ஞாபகத்துக்கு வரவேண்டுமே என்று கவலைப்பட்டேன்.  நான் தொழுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவர்களிடம் கேட்க நினைத்தேன்.  அதன் மூலம் அவர்களும் நானும் ஒன்றுதான் என்று காட்டவிரும்பினேன்.  ஆனால் ரிஸ்க் எடுக்க பயமாக இருந்தது.  நான் ஏதாவது தவறுசெய்துவிட்டால் அதை அவர்கள் கவனித்துவிட்டால் நிலமை இன்னும் மோசமாகிவிடும்.  நான் எனக்குள்ளாகவே முனகிக்கொண்டேன்.  அவர்கள் நான் மத நம்பிக்கை உள்ளவன் என்று நினைத்துக்கொள்ளக்கூடும்.
இருட்டிய பிறகு அவர்கள் திரும்பி வந்தார்கள்.  எனக்கு புரியாத ஒரு மொழியில் அவர்கள் பேசிக்கொண்டார்கள்.  அது அரபியோ, பஷ்டோ மொழியோ அல்ல.  என்ன மொழி அது?  செச்சனிய மொழியா தெரியவில்லை.  என்ன மொழி அது.  யார் இவர்கள். என் கண்களில் இருந்து நீர் உருண்டது.  அது நல்லதுதான்.  நான் எந்த அளவுக்கு பரிதாபமாக காட்சியளிக்கிறேனோ அந்த அளவுக்கு நல்லது.  "சார்" எனக்கு தெரிந்து உருது மொழியில் நான் கூப்பிட்டேன்.  "நான் என்ன தவறு செய்தேன்-? எதை செய்திருந்தாலும் என்னை மன்னித்துவிடுங்கள்"  எனது வாய் சரியாக வேலை செய்யவில்லை.  என்னால் மிகவும் மெதுவாகத்தான் பேச முடிந்தது.  என் பேச்சு ஒரு குடிகாரன் பேசுவதைப்போல அல்லது நாக்கில் பாதியை இழந்துபோன ஒருவன் பேசுவதைப்போல இருந்தது.
அவர்கள் என்னை பொருட்படுத்தவில்லை.  ஒருவன் ட்ரைபாட் ஒன்றின்மீது வீடியோ காமிரா ஒன்றை பொறுத்திக் கொண்டிருந்தான்.  இன்னொருவன் கார் பாட்டரி அளவுக்கு இருந்த யுபிஎஸ் யூனிட் ஒன்றில் லைட்டைப் பொருத்திக்கொண்டிருந்தான்.  இது என்னவென்று எனக்கு தெரியும்.  நான் அத்தகைய பலி ஆடாக மாற்றப்படுவதை விரும்பவில்லை.  ஈத் பெருநாளுக்கு நாங்கள் வாங்குவோமே பலி ஆடு.  நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் அந்த ஆட்டுக்கு உணவு கொடுப்பேன்.  அந்த ஆட்டை நாங்கள் ஒரு வாரம் வரை வைத்திருப்போம்.  நான் பச்சை தழைகள் கொண்ட கிளைகளை முறித்து வந்து அந்த ஆட்டுக்கு தின்னக்கொடுப்பேன்.  அந்த ஆடு பார்க்க நன்றாக இருக்கும்.  ஆனால் அதன் கண்களில் ஒரு சவக்களை தென்படும்.  எனக்கு அதன் கண்கள் பிடிக்காது.  அது தழையை மெல்லுவது பார்க்க நன்றாக இருக்கும்.  அதை நாங்கள் செல்லவமான பிராணியைப்போல வைத்திருப்போம்.  அதன் கால்கள் சிறியதாக இருக்கும்.  சுவரில் செங்கற்கல்மீது முன்னங்கால்களை வைத்து மரத்தில் இருக்கும் இலைகளை தின்பதற்கு அது தாவும்.  அதன் பிறகு ஒருவர் வருவார்.  அந்த ஆட்டை தரையில் வீழ்த்தி பாத்தியா ஓதிவிட்டு இறைவனுக்கு அதை தியாகப்பலி கொடுப்பார்.  அதை நான் பார்க்கவேண்டும் என்று என் பெற்றோர் சொல்வார்கள்.
"இதோ பாருங்கள் எனக்கு இதைச் செய்யாதீர்கள்" நான் இப்போது ஆங்கிலத்தில் அவர்களிடம் சொன்னேன்.  அது எந்த பயனையும் தரவில்லை.  வார்த்தைகள் எனது வாயிலிருந்து சிந்தின.  அதை நான் கட்டுப்படுத்த முடியவில்லை.  கண்ணீர் சிந்துவதுபோல வார்த்தைகளும் சிந்தின.  "நான் எப்போதும் என்னை சுயதணிக்கை செய்துகொண்டுதான் எழுதினேன் மதத்தைப்பற்றி நான் எதையும் எழுதியதில்லை,  நான் எப்போதும் மரியாதையோடு இருக்கவே முயற்சித்தேன்.  நான் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள்.  நான் எதை எழுதவேண்டும் என்று சொல்லுங்கள்.  நான் இனி எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.  நீங்கள் சொன்னால் எழுத்தையே விட்டுவிடுகிறேன்.  அது எனக்கு பிரச்சனை அல்ல.  எழுத்து எனக்கு முக்கியமுமல்ல.  நாமெல்லாம் ஒன்றுதான்.  சத்தியம் இதை நம்புங்கள்."
அவர்கள் எனது வாயை டேப்பினால் ஒட்டினார்கள்.  குப்புற படுக்கச் செய்தார்கள்.  ஒருவன் என் முதுகில் மேல் ஏறி எனது தலைமுடியை பிடித்து என் தலையை உயர்த்தினான்.  அவன் செய்ததில் ஒரு பாலியல் தன்மை கலந்திருந்தது.  எனது மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாளா? நான் செத்துப்போய்விட்டாரல் அவள் வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்வாளா? அப்படி செய்துகொள்ளமாட்டாள், இன்னும் அவள் உயிரோடுதான் இருப்பாள்.  அவனுடைய கையில் இப்போது பெரிய கத்தி ஒன்று இருந்தது.  அவன் காமிராவை பார்த்து ஏதோ பேசினான்.  அதை நான் பார்க்க விரும்பவில்லை.  கண்களை மூடிக்கொண்டேன்.  என் இதயம் இப்போதே வெடித்து இப்போதே நான் செத்துப்போய்விடவேண்டும் அதற்காக எதையாவது செய்யவேண்டும் என்று விரும்பினேன்.
இப்போது எனக்கு கேட்டது  எனது ரத்தம் கொப்பளித்து பாயும் சத்தம் எனக்கு கேட்டது.  நான் அதை பார்ப்பதற்காக என் கண்களை திறந்தேன்.  எனது ரத்தம் தரையில் இங்க் ஊற்றிவிட்டால் பரவுமே அப்படி பரவிக்கொண்டிருந்தது.  நான் தீர்ந்துபோவதை, எனது முடிவை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.  

(பாகிஸ்தானில் லாகூரில் வசிக்கும் மோஷின் ஹமீது பிரபலமான சிறுகதை எழுத்தாளர்.  அவருடைய சிறுகதைகள் தொகுப்புகளாக ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன.  2007ஆம் ஆண்டு புக்கர் பரிசுக்காக அவருடைய பெயரும் பரிசீலிக்கப்பட்டது.  இந்த சிறுகதை கிராண்டா 112 பாகிஸ்தான் சிறப்பிதழிலிருந்து எடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது.  தமிழில் : ரவிக்குமார்.)